கோம்பை எஸ் அன்வர்

மின்னம்பலம் மின் இதழ், திங்கள் 24, செப், 201829

மலையகத் தமிழர் என்றால் இலங்கையும் மிஞ்சி மிஞ்சி போனால் மலேசியாவும் மட்டுமே நம்மவருக்கு நினைவுக்கு வரும். வெகு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழர்கள் இழந்தது பற்றி இன்று வரை யாரும் பெரிதாகப் பேசுவதில்லை. அதனைப் பற்றிப் புத்தகங்களே பெரிதாக வராத நிலையில், தமிழ் சினிமா அதனைக் கதைக்களமாக்கும் என்பது எதிர்பாராதது. அண்மையில் வெளிவந்த ‘மேற்குத்தொடர்ச்சி மலை’ திரைப்படம் அதனைக் கதைக்களமாக்கியது மட்டுமின்றி ஓரளவு தமிழக மக்களிடமும் வரவேற்பைப் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. முற்றிலும் புதுமுகங்களை வைத்து, தமிழ் சினிமா வழக்கமாகப் பின்பற்றிவரும் ‘பார்முலா’க்களைத் தவிர்த்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், மக்களைச் சென்றடைந்திருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தொழில்நுட்பம், வித்தியாசமான கதை சொல்லும் விதம் ஆகியவை என்று பலராலும் பாராட்டப்பட்டாலும், அது தமிழ் சமூகத்தின், ஒரு பிராந்தியத்தின், இதுவரை அவ்வளவாகப் பேசப்படாத வரலாற்றினை மீட்டெடுத்திருப்பது குறித்துப் பேசுபவர்கள் மிகவும் அரிது.

திரையில் விரியும் தமிழரின் வாழ்க்கை

இந்திய சுதந்திரத்திற்கு அடுத்து மொழிவாரி மாநிலப் பிரிவினை வரை, ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தின் ஒரு பகுதிதான் ‘மேற்குத்தொடர்ச்சி மலை’யில் சித்திரிக்கப்பட்டிருக்கும் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பீர்மேடுவும் தேவி குளமும். தமிழர்கள் வியர்வை சிந்தி, உயிரைக் கொடுத்து உருவாக்கிய தேயிலை மற்றும் ஏலத் தோட்டங்களை உள்ளடக்கிய பகுதி அது. தமிழர்கள் பெருவாக வசித்தாலும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, கம்பம் பள்ளத்தாக்கு தமிழர்களின் கூக்குரல்களுக்கிடையே அது கேரளத்துக்குத் தாரை வார்க்கப்பட்டது. அதனையடுத்து மலையாளிகள் அப்பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். கேரள அரசின் கட்டுப்பாட்டுக்குள் அந்த இயற்கை கொஞ்சும் மலைப் பிரதேசங்கள் வந்தவுடன், தமிழர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக, “பாண்டி”களாக நடத்தப்பட்ட சம்பவங்களும் அப்போது அரங்கேறின. இருப்பினும் தோட்டத் தொழிலாளர்கள் இன்றுவரை பெரும்பாலும் தமிழர்கள்தான். இப்பொழுதுதான் வடஇந்தியத் தொழிலாளர்கள் சற்று அதிகரித்து வருகின்றனர். அந்தத் தமிழரின் வாழ்வு குறித்து பேசுகிறது லெனின் பாரதியின் இயக்கத்தில் உருவான ‘மேற்குத்தொடர்ச்சி மலை’.

இந்தப் படத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள, சென்ற ஆண்டு இதே மேற்குத்தொடர்ச்சி மலைகளை மையமாக வைத்து, பிரபல இளம் நடிகர் நிவின் பாலி நடித்து, வெளியான ‘சகாவு’ என்ற மலையாளப் படத்தை ஒப்பிடுவது அவசியம். மலையாளத்தில் சகாவு என்றால் தோழர் என்று அர்த்தம். கேரளத்தில் கம்யூனிஸ்ட்கள் ஒருவரை ஒருவர் அழைப்பது அப்படித்தான். கம்யூனிச சித்தாந்தத்தை, அதன் கேரள வரலாற்றை, இன்றைய சந்ததியினருக்கு எடுத்துச் சொல்லும் நோக்கத்துடன் சித்தார்த் சிவா இயக்கத்தில் உருவாக்கப்பட்ட படம் “சகாவு”. மலையாளிகளின் அமோக ஆதரவுடன் கமர்சியலாக வெற்றியடைந்த படம். மலையாளிகளுக்கே உரிய கலையம்சங்களுடன் சற்று கூடுதல் ஜனரஞ்சகத்தன்மையுடன் உருவாக்கப்பட்ட படம். இடுக்கி மாவட்டத்தில், பீர்மேடுவில் தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களிடையே கம்யூனிச இயக்கத்தை வளர்க்க பாடுபட்ட சகாவு கிருஷ்ணன் மூலமாக, மேற்குத்தொடர்ச்சி மலையில் கம்யூனிசம் வளர்ந்த கதையை ஜனரஞ்சகமாகக் காட்சிப்படுத்துகிறது சகாவு..29a

பிரச்சினை என்னவெனில், இயக்க வரலாற்றை முன் வைக்கும் ஜனரஞ்சகத்தில், வெகு நெருடலாகப்பட்டது அதில் வரும் தோட்டத் தொழிலார்களின் மொழி. தமிழ் சினிமாவோடு ஒப்பிடுகையில் யதார்த்தத்திற்குப் பேர் பெற்ற மலையாள சினிமாவில், பீர்மேடுவில் வசிக்கும் தொழிலாளர்கள் அனைவரும் மலையாளம் பேசுவது நிச்சயம் யதார்த்தம் இல்லை. ஒரு வரலாற்றை, இயக்க வரலாற்றைச் சொல்ல முற்படும் சகாவு, அந்தத் தொழிலாளர்களின் தமிழ் அடையாளத்தை மூடி மறைப்பது, தெரியாமல் நடந்ததாக இருக்காது.

“மறைக்கப்பட்ட ரத்த சாட்சிகள்”

இத்தனைக்கும் மலைகளில் வேரூன்றிய கம்யூனிச இயக்கத்தில் பல தமிழர்கள் இருந்திருக்கின்றனர். கேரள கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றில் இடுக்கி மாவட்டத் தமிழர்களின் பங்கு சாதாரணமானதில்லை. கம்யூனிச இயக்கத்திற்காக, முதலாளி வர்க்கத்திடம் போராடி, ரத்தம் சிந்தி, உயிர் இழந்தவர்கள் “ரத்த சாட்சிகள்” என்று இயக்கத்தால் கவுரவிக்கப்படுவதுண்டு. இடுக்கி மாவட்டத்தின் முதல் ரத்த சாட்சிகளே தமிழர்களான அசன் ராவுத்தரும், பாப்பம்மாளும்தான். டிசம்பர் 5,1979இல் வெண்கலப்பாறை எஸ்ட்டேட்டில் கண்டன ஊர்வலத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் பலியான இன்னொரு “ரத்த சாட்சியான” காமராசு, ஒரு தமிழர்தான். இது போல் கம்யூனிச இயக்கம் இடுக்கி மாவட்டத்தில் காலூன்றுவதற்காக உயிரைக் கொடுத்து உழைத்தவர்கள் எண்ணற்ற தமிழர்கள். பீர்மேடு, உடும்பன் சோலை, தேவிகுளம் தொகுதிகளில் இன்றளவும் தமிழர் எண்ணிக்கை அதிகம். பெரும்பாலானவர்கள் கம்யூனிச ஆதரவாளர்கள். இன்றைக்கு, மூன்றாவது முறையாக தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினராக செயலாற்றிக் கொண்டிருக்கும் CPI (M) அமைப்பைச் சார்ந்த எஸ்.ராஜேந்திரன் ஒரு தமிழர்தான்.

கம்யூனிச இயக்கம் மட்டுமில்லை. இயக்கத்தைத் தாண்டியும், அதிலிருந்து விலகியும் தமிழர்களின் பங்களிப்பு மலைகளில் உள்ளது. எதிரணியில் உயிரை இழந்த தமிழர்களும் உண்டு. வண்டிப் பெரியாரில் சிலையாக நிற்கும் எம்.பாலு அதற்கு அத்தாட்சி. 2016 அக்டோபர் மாதம் இந்திய வரலாற்றில் முதன் முறையாக மூணாறில் தேயிலைத் தோட்டப் பெண்கள் ஒன்றிணைந்து கூட்டமைப்பின் மூலமாக ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நடத்தினர். எல்லாம் தமிழ்ப் பெண்கள்.

மண்ணின் மணம் மாறாத பதிவு

இப்படி மலைகளோடு, இயக்கங்களோடு தமிழர் வரலாறு பின்னிப் பிணைந்திருக்க, அதனை மலையாள சினிமா மறுதலிக்க, லெனின் பாரதியின் ‘மேற்குத்தொடர்ச்சி மலை’ நம்முடைய வரலாற்றை, வெறும் இயக்க வரலாறாக இல்லாமல், மக்கள் வரலாறாக, எந்தச் சமரசமுமின்றி, விருப்பு வெறுப்பின்றி நமக்கு மீட்டுத் தருகிறது. மீட்டெடுக்கும்போது எந்த ஒரு சமூகத்தையும் எதிரியாகக் கட்டமைக்காமல், மண்ணின் மணம் கமழ, புதுமுகங்களைக் கொண்டு, கலை நுட்பத்துடன் செய்யப் பெருந்துணிவு வேண்டும். அதனை சிறப்பாகச் செய்திருக்கிறார் இயக்குநர். பேசப்படாத தமிழர்களின் வரலாற்றை, மக்களின் வரலாற்றைச் சொல்லும் லெனின் பாரதி போன்ற இளைஞர்கள் இன்றைய தமிழ் சினிமாவின் தேவை. ஏனென்றால் இன்றைய இலக்கியம், சினிமா நாளைய வரலாறு ஆகும். பெரும்பாலும் இந்த உணர்வற்றுப் பயணித்துக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவினூடே லெனின் பாரதியின் ‘மேற்குத்தொடர்ச்சி மலை’ மீட்டெடுத்திருக்கும் வரலாறு பாராட்டுக்குரியது. அதைக் கலை நயத்துடன் காட்சிப்படுத்தியிருப்பது இன்னும் சிறப்பு.