
இது ‘இந்து தமிழ் திசை’ 2019ல் வெளியிட்ட “மாபெரும் தமிழ்க் கனவு” என்ற பேரறிஞர் அண்ணா குறித்த சிறப்பு பதிப்பில் வெளியான என் கட்டுரை சிறு மாறுதல்களோடு.
“நான் ஒரு கைலி கட்டாத முஸ்லிம், சிலுவை போடாத கிறிஸ்தவன், திருநீறு அணியாத ஹிந்து. நல்லவை எங்கு தென்படுகிறதோ அங்கெல்லாம் நான் பழந்தோட்டத்தை நாடி பறவையினங்கள் பறந்தோடுவது போல, ஏற்புடைய என் இதயத்துக்கு இனியவைகளை, வல்லவைகளை – அவை இருக்கும் இடம் பற்றி கவலைப்படாமல் எடுத்து வந்து விடுவதுண்டு” என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் பல கூட்டங்களில் தன் மத நம்பிக்கையை, மதங்கள் குறித்த பார்வையை பறைசாற்றுவதுண்டு. இருப்பினும் இஸ்லாமியர்களுக்கும் அறிஞர் அண்ணாவுக்குமான உறவு சாதாரண உறவல்ல. தமிழக சமூக சீர்திருத்தத்திற்கு அயராது பாடுபட்டவருக்கு, அச் சீர்திருத்ததை அரசியல் அதிகாரம் மூலம் ஏற்படுத்த முடியும் என்று நம்பியவருக்கு, நபிகள் நாயகத்தின் வாழ்க்கையில் பல படிப்பினைகள் இருந்தன. விஞ்ஞான யுகத்தில் சமூக சீர்திருத்தத்தை முன்வைத்து போராடிய அண்ணாவும் திராவிட இயக்கமும் எதிர் கொண்ட சவால்களை, கடும் எதிர்ப்புகளை அவர் 1300 ஆண்டுகள் முன்னரே பாலைவனத்து அரபிகளை சீர்திருத்த முனைந்த நபிகள் நாயகம் பட்ட சிரமங்களோடு ஒப்பிட்டு, வியந்து பேசுவார். அண்ணாவைப் பொறுத்தவரை திராவிட இயக்கம் பேசிய சமூக நீதியும், நபிகள் நாயகம் முன்வைத்த சமநிலைச் சமுதாயமும் கிட்டத்தட்ட ஒரே இலக்குதான்.
1957 ல் நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தை கொண்டாடும் மீலாது விழா நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அறிஞர் அண்ணா, “இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற நெறி தழிழ்நாட்டில் பரவி இருந்தது. ஆனால் பாதகர்களாலும் காதகர்களாலும் அந்த நெறி மறைக்கப்பட்டிருந்த நேரத்தில் இஸ்லாம் அந்த நெறியை எடுத்துரைத்தது. எனவே காணாமல் போன குழந்தையைத் தாய்ப்பாசத்துடன் கட்டியணைப்பதைப் போன்றே தமிழகத்தில் இஸ்லாமிய கருத்துக்கள் தழுவப்பட்டன.” என்று இஸ்லாத்திற்கும் தமிழ் சமூகத்திற்குமான ஆழமான உறவை சுட்டிக் காட்டினார்.
இருபதாம் நூற்றாண்டில் தமிழர்களிடையே அரசியல் எழுச்சி உருவான அந்த ஆரம்ப காலகட்டத்தில், குறிப்பாக தமிழக இஸ்லாமியருடன், 1920 களில் இருந்தே மீலாது விழா நிகழ்ச்சிகளில், பிறசமயத்தைச் சார்ந்த பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுவது வழக்கம். தந்தை பெரியாரை பின்பற்றி அறிஞர் அண்ணாவும் எண்ணற்ற மீலாது விழா கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றினார். ஒன்றல்ல இரண்டல்ல 1957 க்குள் கிட்டத்தட்ட அண்ணாவின் கூற்றுப்படி 300 க்கும் அதிகமான மீலாது விழா மேடைகளில் அண்ணா இக்கருத்தை வலியுறுத்தியிருக்கிறார். மீலாது விழா மேடையல்லாது, முஸ்லிம்களின் பல்வேறு நிகழ்ச்சிகளில் அண்ணா கலந்து கொண்டதுண்டு. அவற்றையெல்லாம் கணக்கில் கொண்டால் முஸ்லிம்களுடன் அண்ணா மிக நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார் என்பது தெளிவாகும்.
தமிழகத்தில்தான் என்றில்லை. கடல் கடந்து 1965 ல், சிங்கப்பூர் மலேசிய பயணத்தில், தமிழ் முஸ்லிம்கள் அளித்த விருந்தில், “தமிழர் நெறியும் இஸ்லாமும் ஒன்றே” என்று அழுத்தம் திருத்தமாக பேசியவர் பேரறிஞர் அண்ணா. “பழந்தமிழகத்தினுடைய நெறியைத்தான் இஸ்லாம் என்று நாங்கள் கருதுகிறோம். அது அரபு நாட்டிலிருந்து நபிகள் நாயகம் அவர்களால் அருளப் பட்டதென்றாலும், வைதீக மார்க்கம் தமிழகத்திலே புகுவதற்கு முன்னால் சங்ககாலத் தமிழகத்தின் வேர்களைப் பார்க்கின்ற நேரத்தில், இஸ்லாத்தில் எப்படிப்பட்ட சமூக அமைப்பு இருந்ததோ அப்படிப்பட்ட சமூக அமைப்பைத்தான் பழந்தமிழர்கள் விரும்பி இருந்திருக்கின்றார்கள். இடைக் காலத்திலேதான் ஜாதிகளெல்லாம் ஏற்பட்டது. ஜாதிக்குள்ளே ஜாதி ஏற்பட்டது. ……… இப்படி பல கேடுகள் தமிழ் சமூகத்திலே பிற்காலத்தில் ஏற்பட்டது.” என்பதாக அவர் உரை அமைந்தது.
தந்தை பெரியாருடன் இணைவதற்கு முன்னரே அண்ணாவிற்கு இஸ்லாமிய சமூகத்துடன் ஒரு நெருக்கமான உறவு இருந்தது. காஞ்சிபுரம் ஒலிமுஹம்மது பேட்டையில் இஸ்லாமிய நண்பர்களுடனும், மார்க்க பேரறிஞர்களான ஆலிம்களுடனும் அவருடைய இளமைக்காலம் அமைந்திருந்தது. திருக்குறளை அவர் தெரிந்து கொண்ட காலத்திலேயே திருக்குர்ஆனையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்புப் பெற்றிருந்தார். “என்னுடைய பொதுவாழ்வு சுடர்விட என்னுடைய இதயமூச்சின் இலட்சிய மேடையான திராவிடக் கழக மேடையுடன் நபிகள் நாயக மீலாது மேடையும் எனக்குக் கைக்கொடுத்ததை நான் மறந்து விட முடியாது. நானும் எனது கொள்கையும், சொல்லி வந்த சமுதாய சீர்திருத்த பிரச்சார பலத்துக்கு பெருமான் நபிகள் நாயகத்தின் ஏகதெய்வக்கொள்கை எங்கட்கு பெரிதும் பிரச்சாரத்துணை நின்றது.” என்று பொது வாழ்விற்கு நபிகள் நாயகத்தின் மீலாது விழாமேடைகள் கை கொடுத்ததை நன்றியுடன் நினைவு கூறுகிறார் அண்ணா.
இஸ்லாத்தின் சிறப்புக்களை அண்ணா எடுத்துக் கூறிய அதே நேரத்தில், தந்தை பெரியாரைப் போலவே முஸ்லிம்களிடையே நிலவும் மூட நம்பிக்கைகளையும், வீண் தற்பெருமைகளையும் விமர்சிக்கத் சற்றும் தயங்கியதில்லை. 1942 ல் முஸ்லிம்கள் அதிகமாக வாழும், பண்டைய கடற்கரை துறைமுகமான காயல்பட்டணத்தில், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முன்னணி வகித்த திருப்பூர் மொய்தீன் மற்றும் சென்னை பல்கலைக்கழக அரபுத்துறை பேராசிரியர் முகம்மது ஹுசைன் நயினாருடன் மீலாது விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அண்ணாவுக்கு முன் பேசியவர், “காட்டு வழியே செல்லுகையில் கள்வரிடம் சிக்கிக்கொண்ட ஒருவரை, அவர் தானம் கொடுத்த கைத்தடியும் செருப்பும் வந்து, காப்பாற்றியது” என கட்டுக்கதை ஒன்றை அவிழ்த்து விட்டு, அதை புனித குரானுடன் தொடர்பு படுத்தி “இஸ்லாத்தின் அற்புதம்” என்று பேசியுள்ளார். உடனடியாக அருகிலிருந்த பேராசிரியர் ஹுசைன் நயினாரிடம் “அவ்வாறு குர்ஆனில் இருக்கிறதா” என்று அண்ணா வினவியுள்ளார். பேராசிரியர் இது கட்டுக்கதை என்று உறுதி செய்ய, அதனை கூட்டத்தில் அண்ணா தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் “அற்புதங்களைக் காட்டி இஸ்லாமிய கொள்கைக்கு அருமை பெருமை தேடாதீர்கள்! நபிகள் நாயகத்தின் அஞ்சா நெஞ்சுருதியாலும், அவர் செய்த அறப்போரினாலும் தான் இஸ்லாம் பரவியது.” என்று வலியுறுத்தியதோடு “சீனாவிற்கு சென்றேனும் கல்வி கற்க வேண்டும்” என்ற மார்க்கத்தை சார்ந்த முஸ்லிம்கள், கல்வியில் பின்தங்கியுள்ளதையும் சுட்டிக் காட்டத் தவறவில்லை. தவறை தயங்காமல் சுட்டிக்காட்டும் அண்ணாவின் இந்த ஒளிவு மறைவற்ற பேச்சும், இஸ்லாத்தை தமிழர்க்கு நெருக்கமான அறிவு சார்ந்த மார்க்கமாக விமர்சித்தது, தமிழக முஸ்லிம்களிடம் பெருத்த வரவேற்பை பெற்றது.
தந்தை பெரியாரிடமிருந்து பிரிந்து, அரசியல் அமைப்பாக அண்ணாவின் தலைமையில் தி மு க உருவான போது “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற கொள்கை நிலைப்பாடு ஏக இறைவனை நம்பும் இஸ்லாமியர்களை, குறிப்பாக இளைஞர்களை, திராவிட இயக்கத்தோடு பின்னிப் பிணைந்தது. அண்ணாவோடு இயக்கத்தில் ஆரம்ப காலத்தில் இணைந்து பணியாற்றியவர்களில் தி மு கவின் ஆஸ்தான பாடகர் என்று அறியப்படும் நாகூர் ஹனீபா குறிப்பிடத்தக்கவர். கலைஞர் கருணாநிதியைப் போலவே குடியரசும், தாருல் இஸ்லாமும் படித்து வளர்ந்தவர். தன் வெண்கலக் குரலால் பெரியார் முதற்கொண்டு ஒட்டு மொத்த தமிழகத்தையும் ஒரு அரை நூற்றாண்டுக்கு கட்டிப் போட்டவர், ஹனீபா. “இறைவனிடம் கையேந்துங்கள் ” என்றும் “: “அல்லாவை நாம் தொழுதால்..” என்று இஸ்லாமிய பாடல்களை பாடியவர் “அழைக்கின்றார் அண்ணா அழைக்கின்றார்” என்றும் “ஓடி வருகிறான் உதய சூரியன்” என்றும் தமிழகத்தின் மூளை முடுக்குகளிலெல்லாம், மேடை தோறும், பாடியது யாருக்கும் விசித்திரமாக படாத அளவு அறிஞர் அண்ணாவின் தலைமையிலான தி.மு.க வுடன் இஸ்லாமியர்கள் ஐக்கியமாகி விட்டனர்.
“இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மதம்” என்று முஸ்லிம்களுக்கு எதிராக இன்றளவும் தொடர்ந்து கட்டமைக்கப்டும் பொய் பிரச்சாரத்தையும் தக்க வரலாற்று சான்றுகளுடன் அன்றே மறுதலித்தவர் அண்ணா. இந்திய பிரிவினைக்குப் பின்னர் கிட்டத்தட்ட அரசியல் அநாதைகளாகிவிட்ட, தமிழக முஸ்லிம்களுக்கு மிகப் பெரிய ஆறுதலாக இருந்தது அண்ணாவின் தலைமையிலான தி.மு.கவின் அணுகுமுறை. சுதந்திரத்திற்கு அடுத்து தந்தை பெரியார் முஸ்லீம் லீகை கலைத்து விட்டு அனைவரும் திராவிட கழகத்தில் இணைய வேண்டும் என்று விரும்பினார். அன்றைய இந்திய பிரதமர் பண்டிதர் நேருவும் முஸ்லீம் லீகை கலைத்துவிட்டு காங்கிரஸ் இயக்கத்தில் சேர வேண்டும் என்று மிகுந்த நெருக்கடி கொடுத்தார். இவற்றையெல்லாம் மீறி காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் அவர்கள் இஸ்லாமிய சமூகம் கடும் நெருக்கடிக்குள்ளான நேரத்தில் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் என்ற பெயரில் செயல் படுவது என்று முடிவு எடுத்தார். மாற்றுக் கருத்து கொண்டிருந்த நிலையிலும் பெரியாரும் திராவிட இயக்கமும், முஸ்லிம்களுக்காக, அவர்களின் அரசியல் உரிமைகளுக்காக குரல் கொடுத்தது. தி.க விலிருந்து பிரிந்து தி.மு.க உருவான பின்னர் அறிஞர் அண்ணாவும் குரல் கொடுத்தார். 1947 முதல் 1962 வரை காங்கிரஸ் ஆட்சியில் ஒரு முஸ்லிம் பிரதிநிதிக்கு கூட அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இதனை பேரறிஞர் அண்ணா சுட்டிக்காட்டிய பின்னர்தான் கடையநல்லூர் மஜீதுக்கு 1962ல் மூன்றாவது முறையாக காமராஜர் முதல்வரானபோது அமைச்சர் பதவி வழங்கப் பட்டது. அதே வருடம் தி.மு.க உதவியுடன் அப்துல் வஹாப் ஜானியும் சென்னை மாகாண மேலவைக்குத் தேர்ந்தெடுக்கபப்ட்டார்.
1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அடுத்து கூடிய தி மு க வின் பொதுக்குழுவில், “மத சிறுபான்மை அணி அமைக்கவேண்டும்” என்றெழுந்த கோரிக்கையை, அறிஞர் அண்ணா “காயிதே மில்லத் தலைமையிலான முஸ்லீம் லீக் நட்புக் கட்சியாக இருக்கும் போது அது தேவையில்லை” என்று மறுத்து விடும் அளவிற்கு முஸ்லீம் சமூகத்தோடும் லீகோடும் திமுகவின் உறவு இருந்தது. கணிசமான முஸ்லீம் இளைஞர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, தி மு க வோடு ஒன்றிப் போன பின்னரும், “முஸ்லீம் லீக் இருக்கும் வரை தி.மு.க வில் சிறுபான்மை அணி தேவையில்லை” என்று அண்ணா மறுத்தது, சாதாரண அரசியல் கணக்குகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான நட்பின் அடிப்படையில் அமைந்தது ஆகும். இதனை தொடர்ந்து திமுக உடனான தேர்தல் கூட்டணி மூலம் முஸ்லீம் லீக் மீண்டும் கணிசமான சட்ட சபை உறுப்பினர்களை பெற்றது. அத்தோடு தி.மு.க விலுமே கணிசமான முஸ்லிம்கள் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பாலஸ்தீன இஸ்ரேல் பிரச்சனையில் காயிதேமில்லத் இஸ்மாயில் அவர்களின் கருத்து குறித்து அண்ணாவிடம் பத்திரிக்கையாளர்கள் துருவிய போது, “அவர் என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது, ஆனால் இஸ்மாயிலா, இஸ்ரேலா என்றால் நான் இஸ்மாயில் பக்கம் ” என்று அண்ணா பதிலளித்தது, இந்த உறவின் வலிமையை பறை சாற்றுவதாகும்.
1967ல் அண்ணா தலைமையிலான தி மு க ஆட்சியில் S J சாதிக் பாட்சா சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார். இஸ்லாமியருக்குத்தான் மந்திரி பதவி கொடுத்தாகிவிட்டதே, இனி அவர் பார்த்துக் கொள்வார் என்று ஆட்சி செய்யாமல் அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றவுடன் நேரடியாக களத்தில் முதல்வரான அண்ணா இறங்கியதும் உண்டு. செங்கல்பட்டு அருகே பள்ளிப்பேட்டை என்ற கிராமத்தில் முஸ்லிம்கள் பள்ளிவாசல் கட்டுவதற்கு பிரச்சனை என்று கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களிடமிருந்து தகவல் வர, கொடூரமான கான்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் தன் நேரடிக் கண்காணிப்பில் முஸ்லிம்களின் உரிமையை அண்ணா நிலை நாட்டினர் என்பதை காயிதே மில்லத்தின் பேரன் தாவூத் மியாகான் பலவிடங்களில் குறிப்பிட்டுள்ளார்.
அரவணைக்கும் அதே நேரத்தில் தவறுகளையும் சுட்டிக் காட்டத் தயங்காத அண்ணா, ஆட்சிக்கு வந்த சிறிது காலத்திலேயே மறைந்தது, இஸ்லாமிய சமூகத்திற்கு பெரிய இழப்பு. இருப்பினும், அவர் கட்டியெழுப்பிய இஸ்லாமியருடனான நெருங்கிய உறவு, கிட்டத்தட்ட நிறுவனப் படுத்தப் பட்ட நிலையில், திராவிட அரசியலில் தொடரக் கூடியதாக விட்டுச் சென்றதில் பேரறிஞர் அண்ணாவின் பங்கு மகத்தானது.
#அண்ணா

A good article.
With the rejection of Periyar’s resolution for Proportional Representation at Tamil Maanika Congress Conference in 1922, Periyaar detached himself from Congress and was wanting platforms to went out his ideas. The Muslims offered him platforms by inviting him to Milad meetings. Since 1922 till Periyaar founded Self-Respect Movement in 1925, Periyaar addressed more and more Milad meetings. A study of Dravidian journals like Viduthalai and Kudiyarasu between 1922 and 1925 would vouch for my claim and ensure that Muslim stood by Periyaar between 1922 and 1925 and that it brought about reciprocal co-operation between Muslims and the Dravidian Movement.
LikeLike