பல வருடங்களுக்கு முன்னர் தமிழ் சமண வரலாற்றுத் தளங்களை புகைப்படம் எடுக்க தமிழகத்தின் வட மற்றும் தென் மாவட்டங்களை சுற்றி வந்தேன். பொதுவாக அன்றைய தமிழ் சமண முனிவர்களின் உறைவிடமாக சமணப்படுகைகள் அறியப்பட்டிருந்தன. சமணப் படுகைகளை பலவிடங்களில் ‘பஞ்ச பாண்டவர்’ மலை என்றழைக்கப்படும். அதென்ன சமணப் படுக்கைகள் இருக்குமிடம் பஞ்ச பாண்டவர் மலையென்று அழைக்கபப்டுகின்றது என்பது அன்று வரை புரியாத புதிர். பொதுவாக ஒவ்வொரு ஊரிலும் பஞ்ச பாண்டவர்களை தொடர்பு படுத்தி ஒரு கதை சொல்லுவார்கள். விழுப்புரத்திற்கு அருகில் உள்ள “எண்ணாயிரம்” என்ற ஊரில் “பஞ்ச பாண்டவர் மலையில் சமணப் படுக்கைகள் இருப்பதாக படித்து, அதனை ஆவணப்படுத்த தேடிக் கொண்டிருந்தோம். அதிகமான சமணப் படுக்கைகளை கொண்ட இடம் என்பதால் அதைக் காண்பதில் கூடுதல் ஆர்வம். அது போக எண்ணாயிரம் என்ற எண் குறித்தும் பல்வேறு விதமான கதைகள், அனுமானங்கள்.

கூகிள் இல்லாத, இன்று போல் தமிழ் சமண தளங்கள், வழிகாட்டியுடன் அடையாளப்படுத்தப்படாத காலம். நல்ல சுட்டெரிக்கும் கோடை வெயில். வழியில் தென்பட்ட கிராமத்து மனிதரை நிறுத்தி வழி கேட்டோம். பஞ்ச பாண்டவர் மலை என்றவுடன் மனிதர் சற்றே குழம்பிப் போனார். “அப்பிடி எதுவும் இங்க இல்லீங்கயா” என்றவர், உடனடியாக சுதாரித்து “ஓ நீங்க ‘பஞ்சணை படுகை’ மலையை சொல்றீங்களா?” என்றார். அசந்து போனேன். கல்லிலே தலை வைக்க சிறு மேட்டுடன் செதுக்கப்பட்டிருக்கும் சமண முனிவர்களின் படுக்கைகளை “பஞ்சணை படுகை” என்று அந்த கிராமத்து வாசி அழகு தமிழில் எங்களை திருத்த புல்லரித்துப் போனேன். கருங்கல்லிலே செதுக்கப்பட்ட படுக்கை சமண முனிவர்களுக்கு “பஞ்சணை படுகை” போலும். இன்று நண்பர் ஒருவர் விளாப்பாக்கம் அருகே பஞ்ச பாண்டவர் மலை குறித்து பதிவிட்டிருக்க, பல வருடங்கள் முன் களப்பிரயாணத்தின் போது எனக்கு ஒரு புதிய புரிதலை அளித்த அந்த முன்பின் அறியாத கிராமத்து மனிதர் நினைவில் வந்து போனார். இது குறித்து தமிழ் வரலாற்று ஆர்வலர்கள் மேலும் ஆய்வு செய்ய வேண்டும்.