கோம்பை S அன்வர்

27FRTHIURPARUTHIKUNDRAM5இந்து தமிழ் திசையில் 7 August, 2018

ஆவணப்படுத்துதல் மூலம் பாதுகாப்பை உறுதிசெய்யலாம் என்பதற்கு உத்தரவாதம் இல்லை

தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ள பழமை வாய்ந்த நினைவுச் சின்னங்களில் புகைப்படம் எடுப்பதற்குத் தடை விதிக்கக் கூடாது என்று சமீபத்தில் பிரதமர் மோடி கருத்து தெரிவித்திருந்தார். வரலாற்றை ஆவணப்படுத்தும் என் போன்றவர்களுக்கு அவரது கருத்து மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. நமது நினைவுச் சின்னங்களில், குறிப்பாகத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள புராதனக் கோயில்களில் புகைப்படம் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட சில அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

1990-களில் கல்லூரி முடித்துவிட்டு கேமராவும் கையுமாக தமிழகத்தைச் சுற்றி வந்தபோது, பல இடங்களில் புகைப்படம் எடுப்பது என்பது அவ்வப்போது பிரச்சினையாகும். நிர்வாகத்திடம் அனுமதி வாங்கி புகைப்படம் எடுத்தாலும், “நீ எப்பிடி எடுத்தாலும் எங்க சாமியை உன் கேமராவுல படம் புடிக்க முடியாது” என்று சிலர் சொல்வதையும் கேட்டிருக்கிறேன். புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறைந்துவிடும் என்று ஐதீகம் மாறாத காலத்தில் இப்படிப்பட்ட கருத்துகள் நிலவியதில் ஆச்சரியமில்லை!

தமிழ் சமணக் கோயில்

கல்லூரி முடிக்கும் வரை எனக்கு தமிழ் சமணம் பற்றி அவ்வளவாகத் தெரியாது.  தமிழ்ச் சமூகத்தில் சமணர்களுக்கு இரண்டாயிரம் வருடப் பாரம்பரியம் உண்டு என்பதும், தமிழ் இலக்கியத்துக்கு அவர்கள் ஆற்றிய மிகப் பெரிய தொண்டும், தொன்மையான ஐம்பெருங் காப்பியங்களில் பெரும்பாலானவை சமணத்தைச் சார்ந்தவை என்றும் நான் அறிந்தபோது, தமிழ் சமணர்களை, அவர்களின் வழிபாட்டுத் தலத்தை நேரில் காணும் ஆர்வம் அதிகரித்தது.

வரலாற்று நூல்களின் உதவியுடன் ஒருவழியாக காஞ்சிபுரத்தில் தமிழ் சமணர்களின்  புராதனக் கோயில் இருப்பதை அறிந்தேன். காஞ்சிபுரத்துக்கு அலுவல் காரணமாக நண்பருடன் சென்றிருந்தபோது, சமணக் கோயிலைப் பற்றிப் பலரிடம் விசாரித்தோம். துணிக்கடைக்காரர் காட்டிய வழியைப் பின்பற்றி, காஞ்சிபுரத்தின் எல்லையில் இருக்கும் திருப்பருத்திக் குன்றம் வந்தடைந்தபோது மதியம் 12 மணிக்கும் மேலாகிவிட்டது.

கோயில் சாத்தப்பட்டிருந்தது ஏமாற்றமாக இருந்தது. கோயில் எதிரில் இருந்த ஓடு வேயப்பட்ட வீட்டின் கதவைத் தட்டியபோதுதான், ஒடிசலான தேகத்துடன், சற்றே சிடுசிடுத்த முகத்துடன் பத்மா அக்கா எங்களுக்கு அறிமுகமானார். அவர்தான் அந்தக் கோயிலை நிர்வகித்து வந்தார்.

வாழ்வில் முதன்முதலாக நான் கண்ட தமிழ் சமணக்  கோயில் அது. 1,300 ஆண்டுகளுக்கும் பழமையான ஒரு கோயிலைக் காணும் பேராவலுடன் உள்ளே அடியெடுத்து வைத்தோம். தமிழகத்தில் இருக்கும் பிற கோயில்களைப்  போலவே, திராவிட கட்டிடக் கலை பாணியில் கட்டப்பட்ட கோயில்தான் அது. எனவே, வித்தியாசமாக எதுவும் தோன்றவில்லை. முன் மண்டபத்தின் அடிக்கூரையில் தேய்ந்து போன விஜயநகரத்து ஓவியங்கள்.

அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தபோதே பத்மா அக்கா விறுவிறுவென உள்மண்டபத்துக் கதவுகளைத் திறக்க ஆரம்பித்தார். கசிந்து வரும் வெளிச்சத்தில் உள்மண்டபத்துத் தூண்கள் கோயிலின் தொன்மையைப் பறைசாற்றினாலும், இந்துக் கோயில்களிலிருந்து இது எவ்வகையில் மாறுபடுகிறது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். பத்மா அக்கா சுவிட்ச்சைத் தட்ட, கருவறையில் இருந்த இருளை நீக்கிப் பொன் நிறத்தில் தகதகக்கும் சாந்தமே வடிவான மஹாவீரர் உருவம் தெரிந்தது. வண்ணம் பூசப்பட்ட சுதைச் சிற்பமாகக் காட்சியளித்தார்.

மஹாவீரரைப் படமெடுக்க அனிச்சையாக கேமராவைக் கையிலெடுக்க முற்பட்டபோது, கூடாது என்று எச்சரிக்கும் தொனியில் பத்மா அக்கா கைகளை உயர்த்தி சைகை செய்தார். எவ்வளவோ மன்றாடியும், மஹாவீரரைப் படம் எடுக்க அவர் அனுமதிக்கவில்லை. சரி.. அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் என்று ஏமாற்றத்துடன் திரும்பினேன். அதன் பின்னர் பல முறை அந்தக் கோயிலுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால், மஹாவீரரைப் படமெடுப்பது, தமிழ் சமணத்தைப் பதிவுசெய்வது என்று எனது ஆவலை நிறைவேற்ற முடியவில்லை.

ஆவணப்படுத்துதல் முற்றிலும் சரியா?

பின்னாளில் அதற்கான வாய்ப்பும் உருவானது. ஒரு அரசு நிறுவனத்துக்காகப் புகைப்படம் எடுக்க, சென்னையில் உரிய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, அனுமதி பெற்று, அரசாணையுடன் வெற்றிகரமாக காஞ்சி திரைலோக்கியநாதர் கோயிலினுள்  நுழைந்தேன். இந்த முறை, ஏதேதோ காரணம் சொல்லி அரசாணையை ஏற்க மறுத்த பத்மா அக்கா, முடிவில் இனி வேறு வழியில்லை என்று புரிந்தவுடன், சிறு குழந்தை போல், தலையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு, ‘போய் எடுத்துக்கொள்’ என்பதுபோல் காற்றில் கையை வீசினார்.

கிட்டத்தட்ட அரை மணி நேரம் கோயிலையும், தீர்த்தங்கரர்களையும் மனம்குளிரப் படம் எடுத்ததும், எதையோ சாதித்துவிட்ட பெருமிதத்துடன் பத்மா அக்காவைப் பார்த்தேன். பொதுவாக, பரபரப்பாகக் காணப்படும் அக்கா, வெறித்த பார்வையுடன், கலங்கிய கண்களுடன் நொறுங்கிப்போய் காட்சியளித்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவரிடம் விடைபெற்றுக்கொண்டபோது, “இத்தனை நாள் எஞ்சாமிகளை யாருக்கும் தெரியாமப் பத்திரமா பாதுகாத்திட்டிருந்தேன்.

 நீ பாட்டுக்கு போட்டோ எடுத்துட்டுப் போயிட்டே. இனி நான் என்ன செய்வேன்?” என்றார் விசும்பியபடி. ஒரு நிமிடம் அதிர்ந்துபோனேன். இந்தக் கோணம் நான் சற்றும் சிந்திக்காதது. ஊரார் கண்ணில் படாமல் இருப்பது பாதுகாப்பு என்று எண்ணுகிறார். ஒரு வகையில் உண்மைதான். ஆனால், கருவறையில் இருக்கும் மஹாவீரர் சுதையால் செய்யப்பட்டவர். சிலை திருட்டு பயம் இல்லை. அப்படியென்றால், அவரது பயத்துக்கான காரணம்தான் என்ன? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் அரங்கேறிய மோசமான மதக் கலவரங்களா? நான் அவரிடம் காரணம் கேட்கவில்லை. ஆனால், ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்தது.

“ஆவணப்படுத்துவதன் மூலம் உலகத்துக்கு எடுத்துரைப்பேன்” என்ற என் கருத்து மட்டுமே சரியன்று. உலகுக்குப் படம் பிடித்துக்காட்டுவதன் மூலம் ஏற்படும் கவன ஈர்ப்பு, சில சமயங்களில்  விரும்பத்தகாத பிரச்சினைகளையும் உருவாக்கலாம். கலைப் பொக்கிஷங்கள்  காணாமல் போகவும் வாய்ப்பு உண்டு.

தமிழகத்தின் பல்வேறு  இடங்களில், அழகிய கலைப் பொக்கிஷங்களை, கண்ணுக்குக் குளிர்ச்சியான வனத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் மலைப் பிரதேசங்களைக் காணும்போதெல்லாம், இது உலகம் அறியாமல் இருப்பதே அவற்றுக்குப் பாதுகாப்பானது  என்றே தோன்றியிருக்கிறது.

ஆனால், ஆவணப்படுத்தாவிட்டால் நாளை அவை இருந்ததற்கு ஆதாரமே இல்லாமல் போய்விடும் என்ற அச்சமும் உள்ளது. ஆவணப்படுத்துவதற்காகப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று நான் உறுதியாகக் கருதும் அதே நேரத்தில், மாற்றுக் கருத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது.

இவ்விஷயத்தில் ஓர் அபூர்வ ஒற்றுமை: சமண சித்தாந்தத்தில் 23-வது தீர்த்தங்கரரின் பரிவார தேவதையின் பெயர் பத்மாவதி!